ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து...
🌷 ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து...💘
சிறுகதை
பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் ஏதோ நடக்கிறது! என்னவென்று தெரியவில்லை. இன்றைக்கு எப்படியும் கண்டுபித்தே ஆகவேண்டும். என்று மனதில் நினைத்துக் கொண்டான் , கணேசன்.
" ஏன் இப்படி குட்டிப் போட்ட பூனை மாதிரி மொட்டை மாடிக்கும், கீழுக்குமாக அலையறீங்க?
ரெண்டு நாளாக என்ன வந்தது உங்களுக்கு? சாயந்தரம் ஆனா மொட்டை மாடிக்கு போய்ட்டுப் போய்ட்டு வர்றீங்க?" சுசீலா, பொறுத்துப் பொறுத்து கேட்டே விட்டாள்.
" பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் ஏதோ
' கசமுசா' நடக்குது, சுசிலா!"
" கசமுசாவா? என்ன' கசமுசா'?"
" தெரியலை. கண்டுபிடிக்கணும்."
சுசீலாவின் கண்கள் ஆர்வத்தில் விரிந்தன. அடுத்த வீட்டு சங்கதிகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆதிகாலத்து ஆர்வம்!
" என்னதான் நடக்குது, மொட்டை மாடியில்?" பொறுமை இழந்து கேட்டாள்.
" யாரோ ஒரு ஆம்பளையும், பொம்பளையும் குசுகுசுன்னு பேசிக்கிற சத்தம்.. வளையல் சத்தம்.."
" என்னங்க, நீங்க? சரியா பார்த்தீர்களா? பக்கத்து வீட்டுல யார் இருக்கிறது? முத்துசாமியும், அவர் மனைவியும்தானே? அவங்களாதான் இருக்கும்!"
" இல்லை சுசீ! முத்துசாமியோட மனைவி ஊருக்கு இல்லை போயிருக்காங்க..."
" அட, ஆமாம்! அப்போ யாரா இருக்கும்? "
" ஒருவேளை... முத்துசிமி வீட்டுக்கு அந்தப் பக்கம் வீட்டில் புதுசா குடி வந்திருக்காங்களே ... சிவப்பா இருக்கே ஒரு பொண்ணு..."
" யார், என்னன்னு தெரியாம தப்பா பேசக்கூடாதுங்க.."
" சரி, யார்தான் மொட்டை மாடியில் இருக்காங்கன்னு இன்னிக்கு கண்டுபிடிச்சிடறேன்."
சூரியன் மறைந்து, இருள் சூழ்ந்திருந்தது. கணேசன், தன் வீட்டு மொட்டை மாடிக்கு வந்து கவனித்தான். வளையல் சத்தமும், கிசுகிசுப்பாகத் தெளிவில்லாமல் பேச்சுக் குரலும் கேட்டது.
இரண்டு வீட்டு மாடிக்கும் இடையில் மூன்றடி இடைவெளி இருந்தது. கைப்பிடிச் சுவர் மீது ஏறி, தாண்டிப் போகும் சாகசங்கள் எல்லாம் தன்னால் செய்ய முடியாது என்பதால், ஒரு கனமான பலகையை ஏற்கனவே கைப்பிடி சுவர் மீது போட்டு வைத்திருந்தான்.
அதன்மீது மெல்ல ஏறி... ஊர்ந்து... சத்தம் வராமல் எட்டிப் பார்த்தான். அங்கே.. அவன் கண்ட காட்சி...
" மீனாட்சி! நீயும், நானும் இப்படி இருந்து எவ்வளவு நாளாச்சு?"
" ஆமாங்க! வீட்டுக்கு ஒரு மருமகள் வந்துட்டா, நம்ம ஆசையைக் கொஞ்சம் அடக்கி வைக்கத்தான் வேணும், இல்லையா? "
முத்துசாமியின் அப்பாவும் அம்மாவும் ஒருவர் மடிமீது ஒருவர் சாய்ந்து, பேசிக் கொண்டிருக்க...
கணேசன், மிகவும் வெட்கப்பட்டவனாகவும், அவமானப்பட்டவனாகவும் பின்வாங்கினான்.
💘💘💘
கருத்துகள்
கருத்துரையிடுக